தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை : குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்..

 
 துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபிரகாஷை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.

தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன் என்பவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வழக்கறிஞரான  இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இவர் கடந்த 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது மர்மகும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை

கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் படுகொலை செய்யப்பட்டார்.  இதில்  வழக்கறிஞர் முத்துக்குமாரின் தம்பி சிவகுமாருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  சிவக்குமாரும் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவரது கொலை வழக்கில் கைதான ராஜேஷ் கோவை சிறையில் இருந்து வருகிறார். அவர் ஜாமீனில் வெளியே வர  முத்துக்குமார் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ராஜேஷ் தனது  ஆதரவாளார்களை வைத்து  வழக்கறிஞர் முத்துக்குமாரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.  

இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.  ஆனால்  முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ்  தலைமறைவாக இருந்து வந்தார்.  தட்டப்பாறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஜெயபிரகாஷ் பதுங்கி  இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது ஜெயபிரகாஷ்  காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையறிந்து  சுதாரித்துக்கொண்ட போலீசார் குற்றவாளி ஜெயபிரகாஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில்  ஜெயபிரகாஷ் காலில் காயம் ஏற்பட்டது.  அவரை தூத்துக்குடி அரசு போலீஸார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.