"வேளாண்மை செய்யாமல் வாழ முடியாது என்கிற ஆழமான கருத்தை இப்பயணம் வலியுறுத்துகிறது" - சீமான்

 
seeman

எழுச்சிமிக்க, சிந்தனை வளம்மிக்க, தன்னலமற்ற ஒரு மனிதனின் கனவு தான் இந்த ‘Journey’ என்கிற தம்பி சேரனின் பயணம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ணின் மகத்தானப் படைப்பாளி எனது ஆருயிர் இளவல் சேரன் (@directorcheran) அவர்களது இயக்கத்தில் #JOURNEY எனும் குறுந்தொடர் வெளியாகியிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஆகச்சிறந்தப் படைப்பாளிகளில் தம்பி சேரனும் ஒருவர். அவர் படைத்த பாரதி கண்ணம்மா, பொக்கிஷம், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, பொற்காலம் போன்றவை மிகச்சிறந்தப் படைப்புகள்; காலம் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் தலைசிறந்தத் திரைப்படங்கள்! எளிய மனிதர்களுடைய வாழ்வியலை திரைமொழியில் மிக அழகாகக் காட்சிப்படுத்தும் ஆகப்பெரும் படைப்பாளி தம்பி சேரன். அவர் தன்னுடைய மொத்த ஆற்றலையும் ஒன்றுதிரட்டி படைத்தப் படைப்பாகத்தான் இந்த ‘Journey’ என்கிற குறுந்தொடரைப் பார்க்கிறேன். இது தம்பி சேரனின் பயணம்!

seeman

இதயத்துடிப்பு நின்றுபோனவன் மட்டும் இறந்தவனல்ல; இலட்சியம் இல்லாதவனும்கூட இறந்துபோனவன்தான். மூச்சை நிறுத்திக் கொண்டவன் மட்டும் இறந்துபோனவனல்ல; முயற்சியை நிறுத்திக் கொண்டவனும் இறந்துபோனவன்தான். இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரியான தேடல் இருக்கிறது? எது அவர்களுடைய இலக்காக இருக்கிறது? எது அவர்களுடைய இலக்காக இருக்க வேண்டும்? என்பது போன்ற ஆழமான சிந்தனைகளை இந்தக் குறுந்தொடர் விதைக்கிறது. இன்றைய தலைமுறை கற்கும் கல்வி என்பதே தொழில் சார்ந்த, வர்த்தகம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது. இந்தக் கல்வியைப் படித்தால் இவ்வளவு வருமானம், வெளிநாட்டில் வேலை என்றுதான் கற்பிக்கப்படுகிறது. ஒரு மாணவன், மாவட்ட ஆட்சியராக தான் ஆக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டால், அது வெறும் தொழில் தேர்வுதானே ஒழிய, இலக்கல்ல; தான் மாவட்ட ஆட்சியரானப்பிறகு, கையூட்டுபெறாமல், ஊழல்செய்யாமல், உண்மையும், நேர்மையுமாக இருந்து, மக்களுக்குச் சேவைசெய்வேன் எனும் குறிக்கோளை ஏற்றால், அதுதான் உண்மையான இலக்கு! ஒருவன் தான் பெரிய இயக்குநராக வேண்டும் என எண்ணினால், அது வெறும் தொழில் தேர்வுதான். இயக்குநரானப் பின்பு, ஆகச்சிறந்தப் படங்களை, ஆபாசமில்லாத, அதீத வன்முறைகள் இல்லாத, சிறந்த கலைப் படைப்புகளை மண்ணுக்கும், மக்களுக்குமாக படைக்கப் போகிறேன் என்னும் குறிக்கோள் கொண்டால் அதுதான் இலக்கு! அப்படி ஐந்து கதாபாத்திரங்களை, கதை மாந்தர்களாக எடுத்துக்கொண்டு, தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் உள்ளத்தில், வேளாண்மையின் முக்கியத்துவத்தை, அதன் அவசியத்தை ஊன்றுகிறது இக்கதை. நீங்கள் எந்த வேலையும் செய்யலாம். ஆனால், அதற்கு அடிப்படை விவசாயம்தான். வேளாண்மை செய்யாமல் வாழ முடியாது என்கிற ஆழமான கருத்தை இப்பயணம் வலியுறுத்துகிறது.

500 அடிக்குக் கீழேயுள்ள நீரை ஆழ்துளைக்கிணறுகள் மூலம் நாம் உறிஞ்சிவிட்டால், மரங்கள் அதேபோல தன் வேரை அனுப்பி நீரை உறிஞ்சிக் கொள்ள முடியுமா?  புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள் என யாவற்றுக்கும் நாம் செய்யும் பெரும் துரோகம் இல்லையா அது? மகிழுந்து இல்லாமல், அலைபேசி இல்லாமல், தொலைக்காட்சி இல்லாமல் மனிதனால் வாழ முடியும். ஆனால், நீரும், சோறும் இல்லாமல் வாழவே முடியாது. அதைக் கடந்த ஆண்டுகளில் 'கொரோனா'  எனும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி நமக்கு உணர்த்தியது. நல்ல வேலைக்குச் சென்றால், இலட்சக்கணக்கில் கை நிறைய சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். அரிசி, பருப்பு, காய்கறி போன்றவைகளைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், கடைகளுக்கு அவை எப்படி வரும்? என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை. குண்டூசி, தீப்பெட்டியிலிருந்து அவனவன் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கு அவனே விலையைத் தீர்மானிக்கிறான். ஆனால், வேளாண் குடிமகன் தான் விளைய வைக்கும் எந்தப் பொருளுக்கும் விலையைத் தீர்மானிக்க முடிவதில்லை; வாங்குபவன்தான் தீர்மானிக்கிறான். இதுதான் இங்கே முரணாக உள்ளது. வாகனங்களை விற்பவர்கள், அலைபேசிகளை  விற்பவர்கள், சாராயத்தை விற்பவர்கள், புகையிலைகளை விற்பவர்கள் என எல்லோரும் பல கோடிகளுக்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உலகத்திற்கே உணவளித்து, உழவுசெய்யும் வேளாண் குடிமகன் பிச்சைக்காரனாக இருக்கிறான்; வாழ முடியாமல் தற்கொலை செய்து இறந்துபோகிறான். மகிழுந்து இல்லை; அலைபேசி இல்லை என்று எந்த நாட்டிலும் புரட்சி வந்ததில்லை. ஆனால், நீரும், சோறும் இல்லையென்றால், எந்த நாட்டிலும் புரட்சி வராமல் இருந்ததில்லை. வெனிசூலா, சோமாலியா, நைஜீரியா போன்ற நாடுகள் வேளாண்மையைக் கைவிட்டதால், பிச்சை எடுக்கின்றன அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச்சரிவை நாம் கண் முன்னே பார்த்தோம். 

seeman

நம்முடைய நாடு தற்சார்புப்பொருளாதாரக் கொள்கையிலிருந்து சந்தைப்பொருளாதாரக் கொள்கைக்கு மாறிவிட்டது; தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் பொருளாதாரக்கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. 

இன்றைய தலைமுறையினர் மத்தியில்  தற்சார்புப்பொருளாதாரத்தின் அவசியத்தை இப்பயணம் விதைக்கும். வேளாண்மை என்பது படிக்காதவர்கள் செய்கிற வேலை என்கிற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். மென்பொருள் தொழில்நுட்ப உலகின் பிதாமகன் பில்கேட்ஸ், அமெரிக்காவில் இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கிறார். அதை இந்தத் தலைமுறையினரிடம் வலியுறுத்துவது இப்பயணத்தின் ஒரு பகுதி! மக்கள் சேவையே மகத்தான சேவை; தன்னலமற்று மக்களுக்குத் தொண்டாற்றும் ஒரு தூய உள்ளம்தான் சிறந்த தலைமைப்பண்பாக இருக்க முடியும் என்பதை தம்பி ஆரியினுடைய கதாபாத்திரம் வலியுறுத்துகிறது. "அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும்தான்" என்கிறார் பெருந்தலைவர் காமராசர். எங்களுடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், "அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிற விவகாரம் அல்ல; அது மக்களுக்கு ஆற்றப்படுகிற தொண்டு" என்கிறார். அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும் என்று நாங்கள் கருதுகிறோம். மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலைசெய்யும் ஒரு இளைஞன், தன்னிடத்தில் அதிகாரம் இருந்தால் கூடுதலாக செய்யலாம். அதனால், அதிகாரத்தை நோக்கிப் போகும்போது, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட அதிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டி நிலை உள்ளது. இங்கே அரசியல் கோட்பாடு எனப்படுவது சாதி, மதம், பணம், சாராயம், சாப்பாடு ஆகியவைதான்! இங்கே திட்டங்கள் எனப்படுவது சலுகை, மானியம், போனஸ், இலவசம் ஆகியவைதான். இதற்கு மேலே கூடுதலாக, அளவுக்கதிகமான திரைக்கவர்ச்சி வேறு! ஊழல், இலஞ்சத்தின் விதையே வாக்குக்குக் காசு கொடுக்கும்போதுதான் ஊன்றப்படுகிறது. இந்தக் கட்டமைப்புகளைத் தகர்த்து, ஒருவர் மேலே ஏறி வருவது மிகவும் கடினம் என்பதை தம்பி ஆரியின் கதாபாத்திரம் வலியுறுத்துகிறது.

மனிதத்தைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மதத்தைக் காப்பாற்ற இங்கே பல இயக்கங்கள் உள்ளன. கும்பிடுவதற்கு உங்களுக்கு கோடி சாமிகள் இருக்கலாம். ஆனால், வாழ்வதற்கு இந்த ஒரு பூமிதான் இருக்கிறது. சாமியைக் காப்பாற்ற இங்கே பெருங்கூட்டம் உள்ளது. ஆனால், வாழ்கிற பூமியைக் காப்பாற்ற ஒருவரும் இல்லை. மதத்தைத் தாண்டியது மனிதம் என்ற கருத்தைத் தம்பி கலையரசன் ஏற்றிருக்கும் அமீர் சுல்தான் கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. தகுதியிருந்தும், திறன் இருந்தும் உரிய இடத்தைத் தொட முடியாமல் ஒரு இளைஞன் இந்த சமூகத்தால் எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்பட்டுத் தத்தளிக்கிறான்? என்பதை அந்தக் கதாபாத்திரம் அழகாகச் சொல்கிறது. நேர்த்தியான உரையாடல்களுடன், வலிதோய்ந்த வார்த்தைகளுடன் இருக்கும் காட்சிகளை எழுதுவதற்கு இன்றைக்கு சேரன் அளவுக்கு வேறு எவரும் இல்லை. வாழ்க்கையில் தவறுசெய்யாதவர்கள் எவரும் இல்லை. ஆனால், தவறைத் திருத்திக் கொண்டு, அதற்காக வருந்துவது மிகச்சிறந்த மனிதத்துவம். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், அதைத் திருத்திக் கொண்டு வாழ்வது ஆகப்பெரும் மாண்பு. செய்யாத தவறுக்காகத் தன்னைத் தானே மனச்சிறையிட்டு வருத்திக் கொள்வதை தம்பி கஸ்யாப் ஏற்றிருக்கும் நிதீஷ் என்கிற கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது.

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்கிறார் ஒளவைப்பெருமாட்டி. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ என்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார். ஆனால், படிக்க முடியாமல் எவ்வளவோ மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்; கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகின்றனர். அதற்குக் காரணம், கல்வி வியாபாரமானதுதான். ஒரு நாட்டின் எதிர்காலமே அந்த நாட்டின் வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் கல்வி கிடைக்காமல் எத்தனையோ பிள்ளைகள் அறிவுப்பசியோடு அலைகிறார்கள். வயிறு பசிப்பதைப் போல, மூளைக்கும் அறிவுப்பசி உண்டு, அதைக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது தம்பி பிரசன்னா நடித்திருக்கும் ராகவ் என்கிற கதாபாத்திரம். 

seeman

"பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன்  இதுவே  என் கனவு இந்தியா" என்றார் இளையப் புரட்சியாளர் பகத்சிங். விடுதலைபெற்று 76 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. கல்விக்கு ஏங்காத மாணவனோ, வேலைக்கு அலையாத இளைஞனோ இல்லை என்கிற நிலை இன்னும் உருவாகவில்லை. இரவு உணவு இல்லாமல் இன்னும் கோடிக்கணக்கான பிள்ளைகள் உறங்கப்போகிறார்கள்; பாலுக்குக் குழந்தைகள் அழுது கொண்டுதான் இருக்கின்றன. பகத்சிங் கண்ட அந்தக் கனவு இன்னும் நிறைவேறாதுதான் இருக்கிறது. அதை நிறைவேற்றத் துடிக்கிற எழுச்சிமிக்க, சிந்தனை வளம்மிக்க, தன்னலமற்ற ஒரு மனிதனின் கனவு தான் இந்த ‘Journey’ என்கிற தம்பி சேரனின் பயணம்!

தம்பி சத்யாவின் மிகச் சிறப்பான பின்னணி இசை, தம்பி ஏகாம்பரத்தின் அருமையான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, இயக்கம் என எல்லாமே இக்குறுந்தொடரில் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது தம்பி சேரனினுடைய கனவு! அதை மிக அழகாக திரையில் கூறியிருக்கிறார். நாம் ரசிப்பதற்கு எத்தனையோ குறுந்தொடர்கள் வந்திருக்கின்றன. ஆனால், இந்தக் குறுந்தொடர் நாம் சிந்திப்பதற்கு, அதன்வழி நடப்பதற்கானது! புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் பேராயுதம். உள்ளிருப்பது தாள்கள் அல்ல; நம்மை நல்வழி நடத்தும் கால்கள்! அதுபோன்று இக்குறுந்தொடர் வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல! வருங்காலத் தலைமுறையின் நெஞ்சுக்குள் நஞ்சு விழாமல், நல்ல மணிகளை விதைத்து, ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதற்கான ஐந்து வீரிய விதைகளை விதைத்திருக்கிற ஒரு குறுந்தொடர் சேரனின் இந்தப் பயணம். அதை தயாரிக்க முன் வந்த சோனி நிறுவனத்திற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும், நன்றியும்! இந்தக் குறுந்தொடர் மாபெரும் வெற்றியடைய என் உள்ளம் நிறைந்த அன்போடு வாழ்த்துகிறேன். உலகமெங்கும் பரவி வாழ்கிற என் உயிருக்கினிய உறவுகள் இக்குறுந்தொடருக்குப் பேராதரவு தந்து  வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.