இது தான் இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்..!!
மோட்சத் தலமாக அறியப்படும் காசிக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அப்படியான நிலையில் அவ்வாறு வருபவர்கள் மன நிறைவுடன் செல்ல இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பாலிதானா மட்டுமே உலகில் முற்றிலும் சைவ நகரமாக செயல்படுகிறது.பல ஜைன ஆலயங்களைக் கொண்ட பாலிதானாவில் இறைச்சி விற்பனை செய்வதும் வீடுகளில் கூட உண்பதும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் வாரணாசி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் அடுத்த ஆறு மாதங்களில் நகரின் புறநகர்ப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று நகர மேயர் அசோக் திவாரி கூறியுள்ளார். இதனால் இரண்டாவது சைவ நகரம் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் தான் மேயர் அசோக் திவாரி இந்த இடமாற்றம் செய்யப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதனிடிப்படையில் வாரணாசி நகர எல்லைக்குள் செயல்படும் சுமார் 350 முதல் 400 இறைச்சி கடைகள் படிப்படியாக இடம்பெயர உள்ளது. ராம்நகர், சுஜாபாத், கணேஷ்பூர், அவலேஷ்பூர் மற்றும் ஷிவ்பூர் ஆகிய நகரத்திற்கு வெளியே உள்ள ஐந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு வெளியே இந்த கடைகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 2026 நவம்பர் மாதம் கொண்டாடப்படும் தீபாவளிக்குள் பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான கோயில் நகரங்களில் ஒன்றானதாக திகழும் வாரணாசியில் உள்ள தெருக்களை சுத்தமாக வைப்பது, கழிவுகளை சிறந்த முறையில் கையாள்வது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது போன்றவை இதன் நோக்கமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசியின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இறைச்சி கடைகள் அகற்றம் இருப்பதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசி பல சமூகங்களையும் உணவுப் பாரம்பரியங்களையும் கொண்ட ஒரு நகரமாகவும் திகழும் நிலையில் அங்கு இறைச்சிக்கு தடை விதிப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. காசி பெரும்பாலும் சைவ உணவுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும் சமூக யதார்த்தம் என்ற ஒன்று உள்ளது. இறைச்சி கடைகள் இடமாற்றம் வியாபாரிகள் மட்டுமல்லாமல் மக்களையும் பாதிக்கக்கூடும் என சொல்லலாம். காரணம் மக்கள் தங்கள் உணவு பழக்கங்களையே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு மாறி விடுவார்கள். இதனால் அந்நகரம் சைவமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

