திமுக தோல்விக்கான காரணம் இதுதான்.! தவெக வெற்றி குறித்து போஸ் வெங்கட் ஓப்பன் டாக்!

 
1

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான போஸ் வெங்கட், நீண்ட காலமாக திமுகவுடன் பயணித்து வருகிறார். அரசியல் விவாதங்களிலும் சமூக பிரச்சனைகளிலும் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதற்காகவும் அவர் பிரபலமானவர்.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய காலத்திலிருந்தே அவரை கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவராக போஸ் வெங்கட் இருந்தார். விஜயின் அரசியல் பயணம் வெற்றியடையுமா என்பது குறித்து பல சந்தேகங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யை விமர்சித்துவந்த போஸ் வெங்கட், தேர்தல் முடிவுகளுக்குப் பின் தன் மகள் "18 வயதாகியிருந்தால் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன்" எனத் தன்னைக் கலாய்த்ததாக நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார். மேலும், திமுக தோல்வி குறித்துப் பேசிய அவர், கட்சி நிர்வாகிகள் சிலரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திமிரான செயல்பாடுகளே இதற்குக் காரணம் என்றும், திமுகவினர் இந்தத் தோல்வியை ஏற்றுச் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "தேர்தல் முடிவுகள் வந்த நாளில் என் வீட்டிலேயே என்னை எல்லோரும் கலாய்த்தார்கள். என் மனைவி, 'என்னவோ பேசினீங்க... இப்போ மக்கள் மனசு எங்கே இருக்குனு பாருங்க' என்று சொல்லிவிட்டு சென்றார். அதைவிட என் மகள் சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது" என்றார். "18 வயசு ஆகியிருந்தா நானும் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன்" என்று போஸ் வெங்கட்டின் மகள் கூறியதாக அவர் பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படுகிறது.இதுகுறித்து சிரித்தபடி பேசிய போஸ் வெங்கட், "நம்ம வீட்டிலேயே நம்மை கலாய்க்கிறாங்கன்னா, வெளியே மக்கள் எவ்வளவு கலாய்ப்பாங்கன்னு அப்பவே யோசிச்சுட்டேன்" என்று கூறியுள்ளார்.

அதே பேட்டியில் திமுக தோல்வி குறித்து பேசிய போஸ் வெங்கட், தங்களது கட்சி தோல்வியை நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். "மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் அன்பும் பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலின். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரது தலைமையிலான ஆட்சியில் இருந்த சிலரின் செயல்பாடுகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்

மேலும், "சிலர் அதிகாரத்தை தவறாக துஸ்பிரயோகம் செஞ்சாங்கன்னு சொல்லுறாங்க... இருக்கலாம். சில இடங்களில் திமுக நிர்வாகிகள் மற்றவர்களை மதிக்காமல் திமிராக நடந்துகொண்டதாகவும் சொல்றாங்க. அதுவும் இருக்கலாம்.. அதற்கான பரிசு தான் இந்த தோல்வி. அதை திமுக காரன் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்த தோல்வியை திமுகவினர் ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.