கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்ததற்கு இது தான் காரணம்..! அமைச்சர் ராஜீவ் கொடுத்த விளக்கம்

 
1

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கொத்துக்கொத்தாக மீன்கள் செத்து மிதந்தததால் எண்ணூர் பகுதியை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த சில நாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த மீணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

எண்ணூரில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு அமைச்சர் ராஜீவ் பதிலளித்தார்.

அவர் பேசியதாவது,

எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கொத்துக் கொத்தாக மீன்கள் செத்துக்கிடப்பது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அப்பகுதியை சுற்றியுள்ள ஐந்து பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பக்கிங்காம் கால்வாய் ரயில்வே மேம்பாலம், பக்கிங்காம் கால்வாயும் கொசஸ்தலை ஆறும் சேரும் பகுதி, எண்ணூர் முகத்துவாரம், காட்டுபாக்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வுகள் மூலமாக பக்கிகிங்காங் கால்வாய் பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு லிட்டர் நீரில் கரையக்கூடிய ஆக்சிஜன் 4 மில்லிகிராமுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் அங்கு இரண்டு மில்லிகிராம் தான் இருந்தது. மனிதக் கழிவுகள் நீரில் கலந்ததே ஆக்சிஜன் குறைந்ததற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், அங்கு சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் ஆறுககளில் கலக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. இறந்த மீன்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 2,150 மீன்கள் இறந்து கிடந்த நிலையில், அவை சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்போடு மாசு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த நீரும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, மீன்வளத்துறை இணை இயக்குநர் ஜாய்ஸ் ரேச்சல், எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரியின் பேராசிரியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் இந்த குழு ஆய்வறிக்கைய சமர்ப்பிப்பார்கள்” என்றார்.