இது தான்பா மதுரை....மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் தண்ணீர், மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்

 
1

மதுரையின் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவை நேரில் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி படையெடுத்தனர்.

வெயில் மற்றும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருந்து குடமுழுக்கு விழாவைக் காண வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் குடிநீர் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை தெற்குவாசல் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவைக் காண வந்த பக்தர்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதம் கடந்து அன்புடன் உபசரித்தனர்.

பக்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் குடிநீர் பாட்டில்கள், மோர், குளிர்பானங்கள், ரோஸ் மில்க் உள்ளிட்ட பல்வேறு பானங்களை அவர்கள் வழங்கினர்.

கோவிலை நோக்கி நடந்து சென்ற பக்தர்களை அன்புடன் அழைத்து, "தண்ணீர் குடித்துச் செல்லுங்கள்", "மோர் வாங்கிக்கொள்ளுங்கள்" எனக் கூறி பானங்களை வழங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் பானங்களை வழங்கிய காட்சி இந்து பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது.