"இது பொங்கல் பரிசு அல்ல.. மறைமுக தேர்தல் லஞ்சம்!" - தமிழக அரசை கடுமையாக சாடிய நடிகை கஸ்தூரி..!

 
1 1

புதுக்கோட்டையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "புதுக்கோட்டையில் உள்துறை அமைச்சர் பேசிய ஒவ்வொரு வார்த்தையுமே தேர்தல் பஞ்ச் என்று தான் கூற வேண்டும். பாஜகவினருக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய உரை என்பதை தாண்டி, தமிழக மக்களின் மனதில் உள்ளதை தெளிவாக தெரிந்து வைத்து, பேசியுள்ளார். ஏற்கனவே, ‘ஸ்டாலின் சார்’ என்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தாலும், இன்று முதல் ‘ஸ்டாலின் பாபு’ என்பது மக்களிடையே கேட்கும்.

தேர்தலை முன்னிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், தற்போது ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என புதிதாக ஒன்றை அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் ஏமாற்று வேலை. ஆறாம் தேதி நடக்கவிருந்த போராட்டத்தைத் தடுக்கவே, பேச்சுவார்த்தை நடத்தி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். எங்களிடமே வரி வாங்கி, எங்களிடமே கொடுப்பதற்கு பெயர் ஓய்வூதியம் கிடையாது. இது சரியான ஏமாற்று வேலை.

முதலமைச்சர் அறிவித்துள்ளது ஓய்வூதியம் கிடையாது, அது ஒரு பிஎஃப் போன்று தான். போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக தான் நேற்று நடத்தப்பட்ட நாடகம். இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளது, அடுத்தது நாம் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று தெரிந்தே ஏமாற்றியுள்ளனர்,” என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், “தேர்தல் நெருங்கும் காரணத்தால், பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்துள்ளனர். போன வருடம் எவ்வளவு கொடுத்தார்கள் ’ஜீரோ’. உதயநிதி கையில் வைத்துக்கொண்டு எதை காட்டுவாரோ, அதே கோழி முட்டையை தான் எல்லாருக்கும் பிரித்து கொடுத்தாங்க. அம்மா இருந்துட்டு போனதுக்கு அப்புறம்தான் இவர்கள் 5 வருஷம் இருந்திருக்கிறார்கள். சொன்னதை தான் செய்வோம், செய்வதே தான் சொல்லுவோம் என்று மக்களுக்கு விபூதி அடைத்தவர்களை மக்கள் மிக எளிதாக மன்னிக்க மாட்டார்கள்.

பீகாரில் தேர்தல் நேரத்தில் பத்தாயிரம் கொடுத்ததற்கும், தற்போது தமிழக அரசு கொடுப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. பீகாரில் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும், தொழில் செய்வதற்காகவும் கொடுத்த ஊக்கத்தொகை அது. அதற்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அது மறைமுக தேர்தல் லஞ்சம் கிடையாது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது மறைமுக லஞ்சம்” என்று கஸ்தூரி தெரிவித்தார்.