இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.. - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்..

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெகிறது. இதனையொட்டி இன்றும், நாளையும் இதற்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆகையால் அவர் போட்டியின்று தேர்வாவார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகின. ஆனால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, கழக நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட சட்டதிட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அட்டவணை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (19-03-2023 – ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், கழகத் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யப்படுவதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.