இந்தியாவின் முதுகெலும்பான 136 கோடி மக்களுக்கு இது துளியும் பயனில்லாத பட்ஜெட் : மனோ தங்கராஜ்!

 
1

பட்ஜெட்டில் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்.

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆணவம் பட்ஜெட்டில் மீண்டும் எதிரொலிப்பு – 136 கோடி உழைக்கும் மக்களுக்கு அல்வா!

தனி நபர் மற்றும் நிறுவனங்கள் என இந்தியாவில் வருமான வரி வரம்பிற்கு உட்பட்டு வரி செலுத்துவோர் 8.6 கோடி பேர். அதில், மாதம் 1 லட்சம் சம்பாதிக்கும் மக்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த வாய்ப்புள்ளோருக்கு விலக்கு! பாராட்டுகள்! இந்திய மக்கள் தொகை 144 கோடி பேர். இந்த பட்ஜெட்டில் சாதாரண உழைப்பாளிகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு-குறு தொழில் செய்வோர், முதியோர் என மீதமுள்ள 136 கோடி மக்களுக்கு என்ன பயன்?

இவர்கள் சோப்பு சீப்பு முதல் பெட்ரோல் டீசல் வரை அனைத்திற்கும் வரி செலுத்துகின்றனர். வீட்டு வரி, சொத்து வரி, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி, முத்திரைத் தாள் வரி, சாலை வரி, என அடுக்கடுக்காக வரி செலுத்தப்படுகிறது. இவர்கள் பயன்பெறும் வகையில் என்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது? – பெட்ரோல் டீசல் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகின்றன. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதா? – மக்கள் பணத்தில் போடப்பட்ட சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் டோல் கேட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதா? – அரசு பேருந்துகளிடம் வசூலிக்கப்படும் டோல் கேட் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? – அரசின் சாலை மற்றும் கட்டமைப்பு பணிகளில் வசூலிக்கப்படும் 18% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதா? – சாதாரண மக்கள் வாங்கும் இரு சக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதா? – சாதாரண மக்களிடம் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தில் வசூலிக்கப்படும் 18% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதா? – சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின், இதர மருந்துகள் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்களுக்கான ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? எதுவுமில்லை – இந்தியாவின் முதுகெலும்பான 136 கோடி சாதாரண மக்களுக்கு இது துளியும் பயனில்லாத பட்ஜெட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.