விவசாயிகளை ஏமாற்றி உள்ளது இந்த அரசு - இ.பி.எஸ்..!
வேளாண் பட்ஜெட் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறு/குறு விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ரூ. 75,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி என அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது தமிழக வெற்றி கழக அரசு என கூறினார்.
மேலும், “வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்த கால தி.மு.க ஆட்சியில் வேளாண் பட்ஜெட் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், 20 துறைகள் ஒன்றாக இணைந்து வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதே நிலையில் தான் இன்றைக்கு புதிதாக வந்த த.வெ.க அரசு, தமிழக விவசாயிகளை ஏமாற்றும் விதமாக சுமார் 2.30 மணி நேரம் வேளாண் பட்ஜெட்டை வாசித்தனர். விவசாயிகளுக்கு பயன்பெறும் திட்டம் எதுவும் இடம்பெறவில்லை” என்றார்.

