செங்கோலை பற்றி சிலர் தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது- திருவாவடுதுறை ஆதினம்

 
 திருவாவடுதுறை ஆதினம்

மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல், ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு நேருவிடம் வழங்கப்பட்டது என்பது உண்மை. ஆனால் அது ஆங்கிலேயரிடமிருந்த அதிகரம் இந்தியாவுக்கு மாற்றப்படும் அடையாளமாக வழங்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை.  செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நடந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

Aadhinam

காங்கிரஸ் கட்சியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், “பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை வைக்க இருப்பதாக வந்த தகவலை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தோம். எங்களுக்கும் டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. டெல்லி சென்று செங்கோலை பிரதமரிடம் வழங்க உள்ளோம்.  

செங்கோலை மவுண்ட்பேட்டன் பிரபு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947 ஆம் ஆண்டு வழங்கினார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை வைப்பது மகிழ்ச்சி. நம் செங்கோல் பயன்படுத்தப்படுகிறது என்பது, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். செங்கோல் நீதியை உறுதிப்படுத்தும் சின்னமாகும். சிலர் இதைப்பற்றி தவறாக பேசுவதை கேட்கும்போது வருத்தமாக உள்ளது.மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்து வாங்கியதற்கான பதிவோ, புகைப்படங்களோ மடத்திடம் இல்லை. நேரில் பார்த்தேன் என்று சொல்லவா முடியும்? முடியாதே. அந்த காலத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டால்தான் தெரியும். செங்கோல் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வு எங்கு? எப்போது நடந்தது என்பதும் எனக்கு தெரியாது.” என்றார்.