வரதட்சணை கொடுமையால் போலீஸ் மகள் தற்கொலை
திருவண்ணாமலை அருகே தலைமை காவலரின் மகள் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் அருண் என்பவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வரதட்சனை கொடுமையால் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் மகாலிங்கம் என்பவரது மகள் மகாலட்சுமி என்பவருக்கும் திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் மகன் அருண் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அருண் ஜெர்மனியில் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவ்வப்போது அருணின் தாய் மலர்விழி அடிக்கடி மருமகள் மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உன் தாய், தந்தையிடம் சென்று நகை, பணம் வாங்கி வருமாறு கூறி அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவரிடம் தெரிவித்த பொழுதும் எவ்வித ஒத்துழைப்பும் தனக்கு இல்லாமல் மன அழுத்தத்தில் மகாலட்சுமி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி மாமியாரின் வரதட்சணைகொடுமை தாங்க முடியாமல் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் பக்கத்து வீட்டுகாரர்கள் வீட்டின் அருகே சென்று பார்த்தபோது மகாலட்சுமி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து மங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் தூக்கில் தொங்கியபடி இருந்த மகாலட்சுமி உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தலைமை காவலரின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


