திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

 
ttn

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவரை போற்றி புகழும் , விதமாக தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.  அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறள் பொது தன்மைக்கும்,  மதச்சார்பற்ற தன்மைக்கும்  பெயர் பெற்றது. 

tn

திருக்குறளை  அறம், சமூகம், அரசியல், பொருளாதாரம், மதம், தத்துவம் மற்றும் ஆன்மீக துறைகளை சார்ந்த அறிஞர்களும் தலைவர்களும் கூட போற்றும்  ஒரு நூலாக இன்று வரை விளங்கி வருகிறது. அதனால் தான் காலம் காலமாக தமிழக மக்களாலும் , அரசாலும் போற்றி பாதுகாத்து வரப்படும் ஒரு நூலாக திருக்குறள் திகழ்கிறது. இத்தகைய பெரும் சிறப்புமிக்க நூலை இயற்றிய வள்ளுவரின்  புகழை உலகறியச் செய்யும் வகையில் தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் அரசு சார்பில் வள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்படும்.

tn
 
அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள வள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்வின்போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  இதேபோல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.