"தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி? இது ஒன்னும் வீட்டுத் தீபம் அல்ல"- அறநிலையத்துறை
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து முன்னணி அமைப்பினர் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ’ஆடு, கோழி பலியிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை; உரிமையியல் நீதிமன்றத்தில் போய்தான் நிவாரணம் பெற முடியும்’ என்றும் அவர்கள் கூறினர்; இதே கருத்துதானே தீபம் ஏற்றுவதற்கும் பொருந்தும். இந்த பிரச்னைகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கோயில் தரப்பு - தர்கா தரப்பிற்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தர்காவில் இருந்து குறிப்பிட்ட தூரம் தாண்டி எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையது அல்ல. சிக்கந்தர் தர்காவானது இஸ்லாமியர்களுக்கு பாத்தியப்பட்டது. ஆனால், அங்கு கழிவறை கட்ட முடியாது, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவுமே செய்ய முடியவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது, உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிடப்பட்டது. தனி நீதிபதி உத்தரவில் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு என குறிப்பிட்டுள்ளது எங்களை பாதிக்கும் வகையில் உள்ளது” என்றனர்.
இதனையடுத்து கோயில் தேவஸ்தானம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “வடகலை, தென்கலை போன்று பிரச்சினையை எழுப்பி வருகின்றனர். அறநிலையத்துறை சட்டம் வகுத்துள்ள விதிகள் படியே கோவிலில் அனைத்தும் நடைபெறுகிறது. தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி, நீதிமன்றம் வெளியேவும் ஒரு தூண் உள்ளது, தனி நீதிபதி மனுதாரரின் மனுவை பொதுநல மனுவாக விசாரணை செய்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளார், அதை ஏற்க முடியாது. தனிநீதிபதி ஏன் 2 மணிக்கு முறையீடு, 2.30 மணிக்கு விசாரணை, திடீர் உத்தரவு என அவசர அவசரமாக இந்த வழக்குளை விசாரித்தார். கார்த்திகை திருநாளின்போது மலை மீது ஏற்றப்படுவது கார்த்திகை தீபம்... வீட்டு தீபம் அல்ல. மனுதாரர் விருப்பப்படி மலையில் தீபம் ஏற்றமுடியாது. கோவிலுக்கு என்று விதிகள் உள்ளன. 100 ஆண்டுகளுக்கு மேல் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் நடைமுறை ஆகம விதிப்படி நடந்துவருகிறது. மலைகளில் வாழ்ந்த சமணர்கள் இரவில் விளக்கேற்ற தூண்களை அமைத்திருக்கலாம். இதுபோன்ற தூண்கள் சமணர்கள் தங்கும் இடத்தில் வைத்த வெளிச்சத்திற்கான தூண்களே.இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல” என வாதிட்டனர்.


