மதுரைக்கு புறப்பட்டார் திருப்பரங்குன்றம் முருகன்..!

 
1

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தற்போது ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ஒன்பதாம் நாள் திருவிழாவான (வெள்ளிக்கிழமை) ஆரப்பாளையம் பிட்டுத்தோப்பு மண்டபத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெறுகிறது. இதில் பாண்டிய மன்னனாக பங்கேற்பதற்காக இன்று காலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து முருகன் தெய்வானையுடன் மதுரைக்குப் புறப்பட்டார்.

இதனையொட்டி இன்று காலை திருப்பரங்குன்றத்தில் உற்சவர் சன்னிதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு கொடிமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டனர். முருகனும் தெய்வானையும் நாளை பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலிலும் நாளை மறுதினம், விறகு விற்ற திருவிளையாடலிலும் பங்கேற்றுவிட்டு பின்னர் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருள்கின்றனர்.

பின்னர் மதுரையிலிருந்து செப்.17-ம் தேதி அன்று மாலை மீண்டும் பூப்பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்புகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மற்றும் அறங்காவலர்கள், செய்து வருகின்றனர்.