திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசை நேரடியாக அட்டாக் செய்த அண்ணாமலை!
“வி த லீடர்ஸ்” இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை விளக்கேற்றுவது ஒரு நீண்டகால மதப் பாரம்பரியம். மக்களின் மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்துடன் பிணைக்கப்பட்ட இந்த வழக்கத்தை, அரசியல் காரணங்களுக்காக நிறுத்துவது எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடவுளுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்குவதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய த.வெ.க. அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஒரு தெளிவான உத்தரவைப் பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்தாமல், மேல்முறையீடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்கள் மூலம் இந்த விஷயத்தை இழுத்தடிப்பது, நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும் பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. இந்த விஷயத்தை நீட்டிப்பது அரசின் பொறுப்பல்ல, மாறாக சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது.
ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு பக்தர் குழு அமைதியாக அங்கு சென்று விளக்கேற்றுகிறது. அதனால் யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டுவிடும்? அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக, நீண்ட காலமாக இருந்துவரும் இந்த வழிபாட்டு உரிமையைத் தொடர்ந்து தடை செய்வதை விடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தவெக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

