உள்ளாட்சி அமைப்புகளில் சாதிய கொடுமைகள்... நந்தன் படக்குழுவுக்கு திருமா வாழ்த்து

 
thiruma

உள்ளாட்சி அமைப்புகளில் புரையோடிப் போயிருக்கும் சாதிய கொடுமைகளை இதைவிட வேறெந்த படைப்பாலும் அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் நந்தன் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்


கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நந்தன். தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி இருந்தும் மரியாதை கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுகின்றனர் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இப்படத்தை பாராட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், “எந்த இடத்திலும் உண்மையைவிட்டு விலகாமல், கமர்ஷியலுக்காக எதையும் சேர்க்காமல் சமூகத்தின் அச்சு அசலாக ‘நந்தன்’ படத்தைப் பண்ணி இருக்கீங்க. இதில் வரும் அத்தனை நிகழ்வுகளும் உண்மையில் நடந்தவை, நடப்பவை… கொஞ்சமும் சமரசமற்ற படைப்பு. மிகக் கவனமாக நீங்கள் செய்திருக்கும் ஆவணம். உள்ளாட்சி அமைப்புகளில் புரையோடிப் போயிருக்கும் சாதிய கொடுமைகளை இதைவிட வேறெந்த படைப்பாலும் அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.