மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது - திருமா சாடல்!!

 
thiruma

 அரசியல் எதிரிகளை நிலைகுலைய வைப்பதற்கான தந்திரமாக ரூ.2000 நோட்டை திரும்ப பெற்றதை மோடி கருதலாம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

ரூ.2000 நோட்டுகள் செல்லாது.. கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரம் - மு.க.ஸ்டாலின்..

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதியிலிருந்து 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் , செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகும்  2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது. கிளீன் நோட் பாலிசி என்ற அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு 89 சதவீதம் ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட நிலையில் தற்போது அவை திரும்ப பெறப்பட்டுள்ளது.
 இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது.  இரண்டாயிரம் ரூபாய் பணம் செல்லாதென #ரிசர்வ்_வங்கி அறிவித்துள்ளது. 

ஏழைகளிடம் புழக்கமில்லாத பணம் தான் எனினும்  இது மதிப்பிழக்கிறபோது அனைத்துத் தரப்பிலும் அதன் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நிலைத்தன்மையும் பாதிக்கப்படும். உலக அரங்கில் இந்தியப் பொருளாதார நிலைத்தன்மை குறித்த நம்பகத்தன்மை கடுமையாகப் பாதிக்கபடும். தேசியப் பொருளாதாரத்தின் மீதான பெரும் தாக்குதலாகவும் மாறும். 

அரசியல் எதிரிகளை நிலைகுலைய வைப்பதற்கான தந்திரமாக மோடி இதனைக் கருதலாம். ஆனால் இது மக்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும்.

மோடி அரசின் இந்தப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.