திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறுவார்: அண்ணாமலையின் அரசியல் கணிப்பு!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை காளப்பட்டியில் பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயா காலமான செய்தி கேட்டு மிகவும் சோகமாக இருந்தேன். ஒரு அரசியல் தலைவருக்கான முழு இலக்கணத்துடன் வாழ்ந்தவர் அவர். அவர் முன்னெடுத்த தூய்மையான அரசியலும், அவர் வாழ்ந்த விதமும் எங்களை போன்ற மனிதர்களுக்கு ஊக்கம் அளிக்கும்" என்றார்.
தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய அவர், "மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வர இருக்கிறார். தொகுதி பங்கீடு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இறுதியாக, அது பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். நான் அதை பற்றி பேச முடியாது. எங்கள் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என திருமாவளவன் கூறி வருகிறார். திருமாவளவனுக்கே இந்த முறை ஒரு சீட்டை திமுக தர போகிறது. அதன் பின்னர் அவரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேற போகிறார். அவர் எங்கள் கூட்டணி பற்றி பேசலாமா?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் அது நிரூபிக்கப்படும்" என அண்ணாமலை கூறினார்.
விஜய் அரசியல் பற்றி பேசிய அவர், "தன்னை விமர்சித்தால் தமிழக மக்களை விமர்சிப்பதாக அர்த்தம் என விஜய் கூறியுள்ளார். பொது வாழ்க்கை என வந்தால், நிச்சயம் விமர்சனம் வரும். அப்படி நம் மீது வரும் விமர்சனத்தை, மக்கள் மீதான விமர்சனம் என அரசியல்வாதிகள் சொல்லக் கூடாது" என அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். சசிகலா கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னும் காலம் இருக்கிறது. என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவோம் என எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அது தவறு அல்ல. மக்களுக்கு பயன்படும் ஒன்றைதான் அவர் வாக்குறுதியாக அளித்திருக்கிறார். நிச்சயமாக, தாய்மார்கள் அவரது வாக்குறுதிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.
தமிழகத்தில் கடன் சுமை இருக்கின்றது, பேலன்ஸான பட்ஜெட்டை கொண்டு வந்திருக்க வேண்டும். திமுக ஆட்சி இந்த பட்ஜெட்டில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், ரூ. 3 லட்சத்து 3 ஆயிரம் கோடி தான் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனிமவளத்துறை வெறும் ரூ.100 கோடி மட்டும்தான் வருமானம் பெற்றுள்ளது எனக் கூறுகிறார்கள். அதை நம்ப முடியவில்லை. கனிமவளத் துறையில் இருந்து நிறைய வருமானம் ஈட்ட வேண்டும். அப்படி செய்தால்தான், மாநிலத்தின் கடன் சுமையை சரி செய்ய முடியும்" என அண்ணாமலை கூறினார்.

