ஆசிரியர்கள் போராட்டம்- சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும்: திருமா

 
thiruma

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு (TET) ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை  57 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள்  4ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

thiruma

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், ஆசிரியரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி பெற்றவர்கள், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள். ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது, ஜனநாயகப்பூர்வமானது. இவர்கள் தொடர்ந்து பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தெருவில் நிற்கின்ற நிலையில் உள்ளனர். அரசாணை 149ஆல் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் யாரும் பணிக்கு சேர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசாணை 149இல் இருந்து விளக்கு அளித்து, சிறப்பு அரசாணை பிறப்பித்து இவர்களை நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். முதல்வர் இவர்களுக்கு வேலை வாய்ப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசு இவர்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசிலிக்க  வேண்டும் ” என வலியுறுத்தினார்.