திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை என்பதால் திமுக மீது பாஜகவுக்கு ஆத்திரம்- திருமாவளவன்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் விழிப்பாக இருந்தால் பாஜக வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எரிய முடியும் என விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் எம்பி, “இந்தியா கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை. அது தான் உண்மை. இந்த சூழலில் தான் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் விழிப்பாக இருந்தால் பாஜக வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எரிய முடியும். சனாதனம் என்றால் பயங்கரவாதம் என்பது உதயநிதியின் தலையை சீவ 10 கோடி அறிவித்ததில் இருந்து தெரிகிறது. சமத்துவம் என்பது தலித் மக்களுக்காக மட்டும் பேசும் அரசியல் அல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமத்துவம் தேவை. பாகுபாடு என்பதுதான் இந்து மதத்தின் ஆன்மாகவாக இருக்கிறது. இந்த பாகுபாட்டைதான் சனாதனம் என்கிறோம். எல்லாவற்றிலும் மாற்றம் நிகழும் என்பது இயங்கியல், எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்பது சனாதனம்.
சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்து மக்களிடையே உள்ள இயல்பான நம்பிக்கையை, அரசியல் ஆதாயமாக மாற்றும் செயல் திட்டத்தை பாஜக தீட்டிவருகிறது. பெரும்பான்மை இந்துக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் . இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். அவர்களின் ஆத்திரம் திமுக மீது தான். திமுக தலைவரின் மகன் உதயநிதி என்பது தான் அவர்கள் பிரச்னை. அதனால் தான் அவரை இழிவுபடுத்துகிறார்கள். சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்தியாவை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் அதற்கு தான் பாஜவினர் இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள். பொய் பரப்புரை செய்து இந்துக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக திட்டம் போடுகிறது” என்றார்.