பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள்: திருமா

 
thiruma

திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் கட்சி நிர்வாகி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

thiruma

அப்போது பேசிய அவர், “திமுக- விசிக இடையே எந்த சக்தியாலும் பிளவை ஏற்படுத்த முடியாது. மேற்கு மாவட்டம் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும், திமுகவிற்கு சாதகமாக இருக்காது என பலர் ஆருடம் கூறிய நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அனைத்தையும் பொய்த்துவிட்டது. குறிப்பாக ஆளும் கட்சி கூட்டணி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் வலிமையும் இருந்ததாலேயே மேற்கு மாவட்ட வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு வழங்கி இருக்கிறார்கள்.

ஒன்றிய பாஜக அரசு வெள்ளை பணமாகவே நன்கொடைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவே வரையறைகளை உருவாக்கிக் கொண்டனர். பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி நன்கொடைகளை பெற்றுள்ளனர். கணக்கில் வராத பணம் தனி என ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு அனைத்து கார்ப்பரேட்டுகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதிகப்படியான நன்கொடைகளை பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே அவர்கள் ஒப்பந்தம் வழங்கி வருகின்றனர்.

இந்திய அளவில் பெரும்பான்மையான ஒப்பந்தங்களை அதானி மற்றும் அம்பானி ஆகிய இருவரும் பெற்று வருகின்றனர், 8 ஆண்டு கால ஒன்றிய பாஜகவின் மோடி, அமித்ஷா ஆட்சியில் அதானி, அம்பானி ஆகிய இருவர் மட்டுமே வளர்ந்துள்ளனர். நாடு வளர்ச்சி அடையவும் இல்லை, வல்லரசாகவும் இல்லை, அனைத்து பொது சொத்துக்களும் சூறையாடப்பட்டு வருகின்றனர். தனியாருக்கு தாரை பார்த்து விற்கப்பட்டு வருகிறது.

Thiruma

சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் விலையும் உயர்ந்து விட்டது. மக்களுக்கான ஆட்சியை ஒன்றிய பாஜக அரசு நடத்தாமல் அதானி, அம்பானிக்கான ஆட்சியை நடத்தி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கட்சி நிதியை கார்ப்பரேட்டுகளிடம் வசூலித்து தேர்தல்களை சந்திக்கிறார்கள்.சாதியவாத மதவாத சக்திகளான பாமக, பாஜக உடன் விசிக கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் தாங்கள் பயணித்து வருகின்றோம். பாமக, பாஜக ஆகிய இருவரும் கட்சி ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளை தூண்டுகிறார்கள். மக்களிடம் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மோதல்களை உருவாக்குகின்ற கட்சிதான் பாமக, பாஜக” என விமர்சித்தார்.