"திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர்”- திருமாவளவன்

 
s s

நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்து விசிக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில், ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர் என்ற விமர்சனம் உண்டு. ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்ஜிஆர். பாஜக தமிழகத்தில் காலூன்றாமல் போனதற்கும் மிக முக்கியமான காரணம் எம்ஜிஆர். காங்கிரஸ் காலூன்றாமல் போனதால் பாஜகவும் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. கலைஞருக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என கூறுகிறார்கள். தமிழக அரசியலின் மையமாக இருப்பது கலைஞர் எதிர்ப்பு மட்டும்தான். தமிழ்நாடு முழுவதும் இருந்த கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது. ஆனால் கலைஞரின் ஆளுமை, ஆற்றலை யாரும் தற்போது பேசுவதில்லை. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தமிழ் தேசியவாதிகள் என்றாவது பேசியதுண்டா? தமிழ் தேசியம் பேசுபவர்கள் கலைஞர் கருணாநிதியை மட்டும் எதிர்க்கிறார்கள்.


கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கை உயர்நீதிமன்ற நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி அரசாக திகழ வேண்டும்.  சாதிகலப்பு ஏற்பட்டு விடக்கூடாது. சாதி தூய்மைவாதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சனாதனத்தின் உச்சம். சாதி விட்டு சாதி திருமணம் செய்யக்கூடாது என்பது சனாதன கருத்தியல்” என்றார்.