தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வளர்ந்து விடலாம் என பாஜக நினைக்கிறது: திருமாவளவன்

சனாதனத்தை வீழ்த்த, பாஜகவை ஆட்சி கட்டிலில் அகற்றிட வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற விசிக தொண்டர்கள் பாடுபட வேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள விசிக மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தாயார் படத்திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “கலைஞர், ஜெயலலிதா இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வளர்ந்து விடலாம் என கணக்கு போட்டு மனப்பால் குடிக்கும் கும்பலாக பாஜக திரிந்து வருகிறது. சனாதனம் ஆர்எஸ்எஸ் பாஜக பிற்போக்குத்தனமான பாசிச அரசியலை எதிர்க்க எஸ். சி, எஸ் .டி ,ஓ .பி .சி சிறுபான்மையினர் மக்கள் ஒருங்கிணைந்து நின்றால் மட்டுமே முடியும். ஆதிதிராவிட சமூகத்திற்கு உள்ளே ஊடுருவி ஆதிதிராவிடர் என சொல்லாதீர்கள். பறையர் என சொல்லுங்கள் என பாஜக சொல்லி வருகிறது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சனாதனம், சாதிய கட்டமைப்பு வலுப்பெறும். பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் மீண்டும் தீவிரமடையும். சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். விளிம்பு நிலை மக்கள் மதத்தின் பெயரால் மோதிக் கொண்டு அழியும் நிலை ஏற்படும் சாதிய ஒழிப்பு என அம்பேத்கரின் கனவு தகர்ந்து போகுவது மட்டுமின்றி ஆரியப் பார்ப்பனியும் சனாதனம் இந்துத்துவம் கருத்தியலுக்கு எதிரான போராட்டங்கள் சிதறிவிடும். தமிழ்நாட்டைத் தவிர எந்த மாநிலத்திலும் பிஜேபிக்கு எதிராக ஓபிசி தலைவர்கள் பேசியதில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் ஓபிசி தலைவர்கள் ஆர்எஸ்எஸ்க்கும், பிஜேபிக்கு எதிராக பேசுகிற நிலையை ஏற்படுத்தியது தந்தை பெரியார் தான்” என்றார்.