"விஜய் அரசு மீது சாதிய வெறுப்பை பூசுகின்றனர்" - திருமாவளவன்

 
திருமாவளவன்

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சாதிய வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாக  விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய  விசிக தலைவர் திருமாவளவன், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது. இந்தியா கூட்டணியின் நிலைப்பாட்டுடன் இணைந்து விசிக பயணிக்கும். தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கிறீர்கள். யூகமான கேள்விகளுக்கு நானும் யூகமாக பதிலளிக்க முடியாது. சாதிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி கூட கிடையாது என்பதே விசிகவின் நிலைபாடு. தேர்தலுக்கு முந்தைய எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவெகவுடனான எங்களின் உறவு நெருக்கமாக உள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சாதிய வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றனர்.

பத்திரிக்கையாளர் விஜயனை போலீசார் நள்ளிரவில் அலைக்கழித்து உளவியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்கள். இந்த போக்கு ஜனநாயகத்திற்கு உகந்தடு அல்ல, உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளார்கள். ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும். சேலத்தில் அம்பேத்கர் சிலையை திறக்க 5 ஆண்டுகளாக முடியவில்லை. கடந்த ஆட்சியின் போது அம்பேத்கர் சிலையை திறக்க முயன்றோம். தமிழகத்தில் மட்டும் தான் அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. தவெக அரசு அம்பேத்கர் சிலைகளை திறக்க முன் வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.