“விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்”- திருமாவளவன்
கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நாகர்கோவில் சிறைக் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநீதித்துறை என பெயர் மாற்றம் செய்துள்ளதை மறுபரிசீலனை செய்க. சமூக நீதித்துறை என்று ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றியது அதிர்ச்சியாக இருக்கிறது. விசிகவை பொறுத்தவரை ஏற்கனவே இருந்தபடி ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும். சபரிவர்மன் மரண விவகாரத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று தவெக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
சனாதன சக்திகளை எதிர்ப்பதாலேயே திமுகவுடன் நட்பு கொண்டிருக்கிறோம். கட்டாயத்தின் பேரில் எதிர்த்தாலும் பாஜகவை இன்று வரை எதிர்த்து வருகிறது திமுக. இமயமலை போல் வலிமையான பாஜகவை எதிர்க்க நட்பு சக்திகளின் உறவு தேவைப்படுகிறது. சனாதன சக்தியான பாஜகவை எதிர்க்கும் வரை திமுகவுடன் விசிக நட்பு பாராட்டும். தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். இது மக்களின் கட்டளை. இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நான் பெரிதும் நம்புகிறேன். தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்” என்றார்.

