“திமுகவுடன் பிரேமலதா இணைந்ததால் பழனிசாமி விரக்தியில் பேசுகிறார்”- திருமாவளவன்
தமிழக தேர்தல் களத்தில் பாஜகவினர் உருட்டல், மிரட்டல், பிளாக் மெயில் போன்ற செயல்களை கையாண்டு வருகின்றனர், வட மாநிலங்களில் ஜாதி பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள் அந்த கைவரிசை இங்கே காட்ட பார்க்கிறார்கள் அது தமிழகத்தில் வெற்றி பெறாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வதற்காக இன்று (08.04.26) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுமக்களின் ஆதரவோடு இருநூறு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். வெற்றிக்கு முதன்மை பலமாக இருப்பது கூட்டணி பலம். திமுகவை எதிர்த்து நிற்கின்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி பலம் இல்லாமல் இருக்கின்றனர். திமுக கூட்டணி கொள்கை பிடிப்புள்ள கூட்டணி 23 கட்சிகளைக் கொண்ட பலமான கூட்டணி தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற கூட்டணி. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு திமுக செய்த பல்வேறு சாதனைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. அவர்களின் ஏகோபித்த ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எங்கள் கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் மட்டுமே தவறான தகவலை மட்டுமே பரப்ப முடிகிறது. அதனை பொருட்படுத்தாமல் மக்கள் எங்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் மதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பாஜகவை வெற்றி பெற வைத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கும் என்று பேசி இருக்கிறார். இதுதான் பாஜக என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் தேர்தல் களத்தில் உருட்டல், மிரட்டல் பிளாக் மெயில் போன்ற செயல்களை பாஜகவினர் கையாண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்களோ ஆதாயம் தேடுகிறார்களோ அதேபோல் இங்கேயும் கைவரிசை காட்ட பார்க்கிறார்கள். அவர்களின் எந்த சதி முயற்சியும் இங்கு வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும். தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டனர் ஆனால் அது வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதால் ஏமாற்றம் விரக்தியின் காரணமாக அவர்களை அப்படி பேச வைக்கிறது. இவற்றை தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக கவனித்து வருகிறார்கள். தற்பொழுது பரப்புரைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும்தான் உள்ளது. தமிழ்நாட்டு அதிகாரிகள் இருக்கலாம் ஆனால் தேர்தல் ஆணையம் தான் அவர்களை வழிநடத்துகிறது. விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்பதற்கு திமுக காரணம் கிடையாது. வேண்டுமென்றே திமுகவிற்கு எதிராக இதை திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.



