“திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை” - திருமாவளவன்
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது, இதே கட்டுக்கோப்புடன் தேர்தலை சந்திக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கருத்தை நானும் வழிமொழிகிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், “திருச்சி - தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும்.சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும் பணி கிடப்பில் உள்ளது. இது அமைப்பிற்கு ஏமாற்றத்தை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்தி தரவேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது போன்ற போராட்டங்கள் தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என என சுருக்கி பார்க்க தேவையில்லை. திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கூட்டணியில் எந்த குழப்பம் இல்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. கட்டுக்கோப்புடனே தேர்தலை சந்திப்போம். மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான திமுகவிற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இளைய தலைமுறை பாதுகாக்க வேண்டும் தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு முற்றராக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
மகளிர் முன்னேற்றத்திற்காகவே மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு கடன் வழங்குகிறது. அவர்கள் கடனை திரும்ப செலுத்த தாமதமானாலும் அவர்கள் கேட்டால் கூடுதல் பணத்தை கடனாக வழங்குகிறார்கள். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி கடன் கொடுத்து விட்டு இந்திய அரசு அதை தள்ளுபடி செய்துள்ளது. அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கூட்டணி உருவாக்குவதில் அதை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறையோடு இருக்கிறோம். இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கூறிய கருத்து வரவேற்க வேண்டிய கருத்து. அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் பங்கு கேட்பதில் தவறில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்கிற உரிமையில் தான் கேட்கிறார்கள். அது தருவதா வேண்டாமா என்பது பேச்சு வார்த்தையில் தான் தெரியும். கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு பொருந்தாது, பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை அவர் விளக்குவார். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கு இருக்கிறது.திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்தார்.

