திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்; எந்த சிக்கலும் இல்லை- திருமாவளவன்
திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்,தொடர்கிறோம்,எந்த சிக்கலும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டுமென கேட்பது புதிய கோரிக்கை அல்ல. விசிக தொடங்கிய காலத்தில் இருந்தே வைக்கப்பட்டு வரும் கோரிக்கை.ஆனால் பழைய வீடியோவை ஏன் இப்போது போட்டனர் என்பதை என் அட்மினிடம்தான் கேட்க வேண்டும். வி.சி.க.விடம் மதுரை மாவட்ட ஆட்சியர் அடிக்கடி பிரச்சனை செய்கிறார். கொடி கம்பம் விவகாரத்தில் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார். சென்னை உயர்நீதிமன்றம் கொடி கம்பம் நடுவதற்காக அனுமதி அளித்தபோதிலும் ஆட்சியர் அனுமதி தர மறுக்கிறார். இப்போது சாலையை அகலப்படுத்தும் பணிக்காக புதூரில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டுள்ளது. இது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள யார் வேண்டுமேனாலும் மாநாட்டில் கலந்துகொள்ளலாம். தேர்தல் கூட்டணி கணக்கில் இந்த மாநாட்டை நான் நடத்துகிறேன் என்றால் அதைவிட அசிங்கம் வேறு எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்,தொடர்கிறோம்,எந்த சிக்கலும் இல்லை. கூட்டணி முறியும் என்பது சிலரின் வியூகம் மட்டுமே. மதுவிலக்கு மாநாடு பற்றி நான் பேசியதை சிலர் ஊதி பெரிதாக்க முயற்சிக்கின்றனர். மதுவிலக்கு பற்றிய நியாயமான கோரிக்கையை திசை திருப்ப சிலர் முயற்சிக்கின்றனர்” என்றார்.