கட்சி நலனை விட கூட்டணி நலன், நாட்டு நலன் தான் முக்கியமானது - திருமாவளவன் பேட்டி

 
thirumavalavan

கட்சி நலனா?, கூட்டணி, நாட்டு நலனா? என்ற கேள்வியின்போது நாட்டு நலன் முக்கியமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: I.N.D.I.A கூட்டணி உருவானதில் விசிக கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என உறுதியாக இருந்தோம். எனினும் 2 தொகுதிக்கு உடன்பட்டிருப்பது விசிகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே விரிசல் ஏற்படும். இதைப் பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்கலாம் என்ற உள்நோக்கம் சிலருக்கு உள்ளது. திமுகவிடம் 3 தொகுதிகளை பெறுவதற்கு விசிக ஏன் முழு மூச்சில் செயல்படவில்லை என்ற விமர்சனங்கள் வைக்கின்றன. 

அது நல்லெண்ணத்தில் வைக்கும் விமர்சனம் இல்லை. 3 தொகுதிகள் என்பது விசிக சுயமாக எடுத்த முடிவு. கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனும்போது அதற்கான யுத்திகளை வகுத்தோம் உரிய அழுத்தங்களை கொடுத்தோம். கட்சி நலனா, கூட்டணி, நாட்டு நலனா என்ற கேள்வியின்போது, நாட்டு நலன் முக்கியமானது. அதற்கு கூட்டணி நலன் முன் நிபந்தனையாக இருக்கிறது. எனவே, கட்சி நலனை அடுத்த நிலைக்கு தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது என கூறினார்.