2025 ஆம் ஆண்டு "சனநாயகம் தழைத்தோங்கும்" ஒரு புதிய ஆண்டாக மலரட்டும் - திருமாவளவன் வாழ்த்து!

 
thiruma

2025 ஆம் ஆண்டு "சனநாயகம்  தழைத்தோங்கும்" ஒரு புதிய ஆண்டாக மலரட்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு "சனநாயகம்  தழைத்தோங்கும்" ஒரு புதிய ஆண்டாக மலரட்டும். சாதி- மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும், சமூக நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பெருகட்டும் என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த 2024ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்று ஒரு மாநில கட்சியாக வலுப்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அத்தகைய அங்கீகாரத்தை எமக்கு வழங்கிய தமிழக மக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!


2024ஆம் ஆண்டு சனாதன -சாதிய, மதவாத வெறுப்பு அரசியலுக்கு எதிராக அகில இந்திய அளவில் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து 'இந்தியா கூட்டணியை' உருவாக்கியதும்; அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதான சக்திகளின் பெரும்பான்மை பலத்தை உடைத்திருக்கிறோம் என்பதும் கடந்த ஆண்டில் நிகழ்ந்த சிறப்புக்குரிய சாதனைகளாகும். அத்துடன், கடந்த ஆண்டு விசிக சார்பில் சனவரி-26 இல் "வெல்லும் சனநாயகம் மாநாடு", அக்டோபர்-2ல் "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு" ஆகிய இரண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடுகளை நடத்தினோம் என்பதும்; அவற்றின் மூலம் பரந்துபட்ட அளவில் வெகுமக்களின் நன்மதிப்பைப் பெற்று, அரசியல் களத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதும்  குறிப்பிடத் தக்கவையாகும்.  

அதே வேளையில், ஃபெஞ்சால் புயலினால், கனமழை மற்றும் வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை,தரும்புரி மற்றும்  கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட அவலமும் நடந்தேறியது. அது வேதனைகள் நிறைந்ததாய் அமைந்தது. மலரும் புத்தாண்டான 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.