முதல்வர் தலைமையிலான குழுவில் திருமாவளவனுக்கு இடம்
பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தவெக அரசு மறுசீரமைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு விசிக ஆதரவு அளித்துள்ளது. விசிகவிற்கு தவெக அமைச்சரவையில் இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய 2 பெரிய கட்சிகளின் ஆட்சிகளிலும் கூட விசிகவிற்கு அமைச்சர் பதவி என்பது எட்டாக்கனவாகவே இருந்தது. அந்த நீண்ட காலக் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார். ஆனால், திருமாவளவன், "நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை, திமுகவோடு நட்பு தொடர்கிறது" என்று பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது. திமுகவும் திருமாவளவனுடன் இன்னும் நட்பு பாராட்டி வருகிறது.
இந்நிலையில் பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தவெக அரசு மறுசீரமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பட்டியலின, பழங்குடியின எம்பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் இக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். திமுகவின் ஆ.ராசா, அதிமுகவின் என்.தனபால், விசிகவின் ரவிக்குமார் உள்ளிட்டோருக்கும் இக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

