உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்: திருமாவளவன்!

 
1
 விசிக தலைவர் திருமாவளவன் ஃபேஸ்புக் நேரலையில் பேசியதாவது:-

அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளோம். அதேநேரம், பட்டியலினத்தவரை குழுக்களாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனவும், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் பொருத்த வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் மீது சீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்திருக்கிறோம்.

ஆனால், நாம் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டத்துக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததாலேயே சட்டம் நிறைவேறியது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். இதன் மூலம் நாம் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்பது புலப்படும். ஆனால், தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பவர்கள் குறித்து யாரும் விமர்சிப்பதில்லை. ஆதரிக்கும் நம்மை கடுமையாக விமர்சிக்கின்றனர். இதற்கு விசிகவினர் எதிர்வினையாற்ற வேண்டாம். தீர்ப்பில் உள்ள ஆபத்தை புரிந்து கொண்டு மாயாவதி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். அரசின் அமைப்பான தேசிய பட்டியலின ஆணையம்கூட எதிர்க்கிறது.

இடஒதுக்கீட்டை ஒழிக்க சங்பரிவார்கள் உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அறிந்ததாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜகவின் முயற்சியை முறியடிப்பதற்காக சிராக் பாஸ்வான் உள்ளிட்டோருக்கு உறுதுணையாக இருக்கிறோம். மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை பிரித்து கொடுப்பதே சமூக நீதி. மனம்போன போக்கில் பட்டியலினத்தவர்களை கூறுகளாக போட்டு, அரசியல் தளத்தில் நிலவும் ஒற்றுமையையும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் சிதைக்கப் பார்க்கின்றன. உண்மையான எதிரிகளை அம்பலப்படுத்தும் நோக்கிலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.