சைதை துரைசாமிக்கு இப்படியொரு துயரமா? - திருமாவளவன் இரங்கல்

 
Thiruma

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனிதநேயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் மேனாள் சென்னை மாநகர மேயருமான திரு. சைதை துரைசாமி அவர்களின் அருமை மைந்தரும் திரைப்பட இயக்குநருமான திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேசம் பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது கடந்த பிப்ரவரி 04 அன்று விபத்தில் சிக்கி சட்லெஜ் நதியில் மூழ்கிப் பலியானார் என்பது தாங்கவொணா துயரத்தை அளிக்கிறது.  பேரிடர் மீட்பு படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் என பலர் தீவிரமான தேடுதலை மேற்கொண்டும்  எட்டு நாட்களுக்குப் பின்னர் அவரது உடலைக் கண்டெடுத்ததே துக்கத்திலும் சற்று ஆறுதலை அளிக்கிறது.  மறைந்த இயக்குநர் வெற்றி அவர்கள் சைதை துரைசாமி அவர்களின்  ஒரே மகன் என்னும் நிலையில், அவரது இழப்பை சைதை துரைசாமி அவர்களும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு தாங்கிக் கொள்வர் என்பது மேலும் கவலையளிக்கிறது. 

vetri

சைதை துரைசாமி அவர்களை கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து நான் அறிவேன். அவர்,  திட்டமிட்ட , ஓய்வில்லாத, நேர்மையான,  கடும் உழைப்பால் தமது வாழ்வில் வெற்றி கண்டவர். ஏழை எளியோருக்கு உதவுவதில் இளம் வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் காட்டியவர். குறிப்பாக, மாணவச்செல்வங்களுக்குப் பெருமளவில் உதவி, இன்றைக்கும் ஊக்கப்படுத்தி வருபவர்.  மனிதநேய அறக்கட்டளையை நிறுவி அதன்மூலம் ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கும்; எளிய மக்களுக்கும் சிறிதும் விளம்பரமே இல்லாமல் பேருதவிகளைச் செய்து வருபவர். அவருடைய "மனிதநேயம் ஐஏஎஸ் அகடமியின்" மூலம் ஏராளமானவர்கள் ஐஏஎஸ் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


வேளச்சேரி பகுதியில் 'அம்மா திருமண மண்டபம்' ஒன்றைக் கட்டிவிட்டு ஏழை எளியமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளார். ஆம்புலன்ஸ், குளிரூட்டப்படும் சவப்பெட்டிகள்  போன்றவற்றை எளியமக்கள் பயன்படுத்துவதற்கென கட்டணமில்லாமல் அளித்து வருகிறார். இத்தகைய மனிதநேயம் கொண்ட அவருக்கு இப்படியொரு துயரம் என்பதைச் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்றும் விளங்கவில்லை.  வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கினார் என்னும் தகவல் கிட்டியதும், அவருடைய உதவியாளரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். 'உயிரோடு இருப்பாரென்றுதான் நம்புகிறோம்' என் அவர் கூறியபோது, சற்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால், தற்போது அவரது உடல்தான் கிடைத்தது என்றதும் பேரதிர்ச்சிக்குள்ளானேன்.  அவரை இழந்துவாடும் அண்ணன் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.