2024-ல் பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்- திருமாவளவன்

 
Thiruma

தமிழக முதலமைச்சர் வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

thiruma

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த தோள் சீலை மாநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “200 ஆண்டுகளுக்கு முன் சனாதனத்தை எதிர்த்து நடத்திய சமூக நீதி அறப்போரை நினைவு கூறும் நிகழ்வு இது. தற்கால சனாதனத்துக்கு ஒரு அடையாளம் நமது கவர்னர். இவர் தான் சனாதனத்தின் காவலராரக இருக்கிறார். சனாதனம் எப்படி இருக்கும் என்பதற்கு கவர்னர் தான் எடுத்துக்காட்டு. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. இப்போதே பாஜகவினர் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டில் தொடங்கி விட்டார்கள். பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் வதந்தி பரப்பினார்கள். எங்கோ நடந்த காட்சியை பீகார் தொழிலாளர்கள் தாக்குதல் காட்சி என்று பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

முதல்-அமைச்சர் பிறந்த நாளில், பீகார் துணை முதல்-அமைச்சர் தேஜஸ்வி கலந்து கொண்டார். எங்கே இவர்கள் ஒன்றிணைந்து விடவார்களோ என்று நினைக்கிறார்கள். நித்திஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரசுடன் சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்தி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. சென்னையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரசுடன் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் சனாதனத்தை வீழ்த்த முடியும். மூன்றாவது அணி அர்த்தமில்லாதது , அது கரை சேராது என பேசினார். இதை விட வேறு என்ன பிரகடனம், அறை கூவல் தேவை?

Thiruma

குமரி மாவட்டத்தை காலூன்றும் இடமாக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைப்பற்றி விடலாம் என நினைக்கிறார்கள். இதற்கு அ.தி.மு.க. தோலில் ஏறி சவாரி செய்கிறார்கள். அ.தி.மு.க.வும் அதற்கு இடம் கொடுக்கிறது செல்கிறது. சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.

மோடியா, லேடியா என்று சவால் விட்ட ஜெயலலிதாவை தன்னுடைய தலைவியாக ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் போய் முடங்கி கிடக்கிறார். தமிழினத்துக்கு மாபெரும் துரோகம் விளைவிக்கிறார். சனாதன சக்திகள் இங்கே வலிமைபடுவதற்கு வழிவகுத்து கொடுக்கிறார். இது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க. வழிநடத்துகிற எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கிறார். மாபெரும் ஆபத்தான சக்தி தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க. இடம் கொடுக்கிறது.

குமரி மாவட்ட மக்கள் மதத்தின் பெயரில் பிளவுபட்டு இருப்பதை பயன்படுத்தி மீண்டும் மண்டைக்காட்டில் வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் நாள்தோறும் அரைவேக்காட்டு தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். முதலமைச்சருக்கே சவால் விடுகிறார். தொட்டு பார் என்கிறார். எவ்வளவு ஆணவம் உள்ளது. அண்ணாமலைக்கு முதிர்ச்சி, பக்குவம் இல்லை. இப்படியெல்லாம் பேசிதான் பதற்றத்தை ஏற்படுத்துவது அவர்களின் செயல் தந்திரங்களில் ஒன்று. தி.மு.க. அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். தி.மு.க.வுக்கு எதிராக நிற்கிற 2-வது பெரிய கட்சி பா.ஜனதா தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செயல்படுகிறார்கள். அ.தி.மு.க. அதற்கு இடம் கொடுத்து விலகி நிற்கிறது. தி.மு.க.வை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை.


2024-ல் பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. எனவே சனாதன சக்தியை வீழ்த்த, ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகளை எல்லாம் சந்தித்து பேச வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.