திருமா மீதான கொலை முயற்சி வழக்கு - ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை

திருமாவளவன் உள்ளிட்ட 10 பேர் மீதான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றிருந்த போது, அங்கு இருந்த வீரப்பன் உள்பட 10 பேர் தாக்குதல் நடத்தியதாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வேதா அருண் நாகராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் திருமாவளவன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு ,ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அரசியல் அழுத்தம் காரணமாக தன் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று நீதிமன்றத்தில் வேதா அருண் நாகராஜன் வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன்? என நீதிபதி சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.