ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம்- மு.க.ஸ்டாலின்

 
ச்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி விழா இன்று கன்னியாகுமரி சுற்றுலா மாளிகை அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தலில் நடைபெற்றது. இதில் சுமார் 1.45 கோடி திட்ட மதிப்பீட்டில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு தோரண நுழைவுவாயிலுக்கான அடிக்கல்லை தமிழக முதலமைச்சர் விழா மேடையில் இருந்து தொடங்கி வைத்தார். மேலும் 400 பக்கங்கள் கொண்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் வெளியிட்டார். அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

திருவள்ளுவர் பசுமை பூங்கா திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக திருக்குறள் சம்பந்தமான கண்காட்சியும் முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டப்பட்டது. விழாவில் கவிஞர் வைரமுத்து மற்றும் பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன் தங்கம் தென்னரசு எ.வ.வேலு ,சாமிநாதன், ராஜேந்திரன் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு என மூன்று  புதிய படகுகள் வாங்கப்படும். அவற்றிற்கு காமராஜர், மார்ஷல் நேசமணி மற்றும் ஜி. யு. போப் ஆகியவர்களின் பெயர்கள் சூட்டப்படும் . ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் பயிற்சிவிப்பவர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக மாவட்டம் தோறும் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கடைசி வாரம் குறள் வாரமாக அறிவிக்கப்படும். ஆண்டுதோறும் 13 பேருக்கு கலை இலக்கிய அறிவு சார் விருதுகள் வழங்கப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.