‘திரை இசையில் பாரதி’ - தமிழக அரசு சார்பில் நாளை மெல்லிசை நிகழ்ச்சி!!

 
kalaivanar

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில், ‘திரை இசையில் பாரதி’ – மெல்லிசை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதி நினைவு நாள் விழா பேருரையில் "பெரும்புலவன் பாரதி மறைந்து 100 ஆண்டுகள் கடந்தாலும், அவரின் சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர சிந்தனைகளாகும். குடும்பமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்துக் கேள்வி கேட்டவர் பெரும்புலவன் பாரதி. அன்பு வேண்டும் - அறிவு வேண்டும் - கல்வி வேண்டும் - நீதி வேண்டும் இந்த நான்கையும் பாரதி என்றும் விரும்பினார். இன்றும் நமக்கு பெரும்புலவன் பாரதி அவசியம் தேவை" என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். பெரும்புலவன் தமிழ்க்கவி பாரதியாருக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 14 முக்கிய அறிவிப்புகளை சட்டப் பேரவையில் வெளியிட்டார்கள். குறிப்பாக, மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடித்தல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாரதியார் ஆய்வு இருக்கை அமைத்தல், உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியுதவி. பெண் கல்வியையும் பெண்களின் விடுதலையினை வலியுறுத்திய மகாகவி பாரதியாரின் பெயரினை ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு , 'மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா' என பெயர் சூட்டல் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

tn


அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புகளில் ஒன்றான திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் வகையில், 'திரையில் பாரதி' என்கிற , இசைக்கச்சேரி விழாவாகக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில் நாளை (23.7.2022) மாலை 6.00 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குழுவினரால் 'திரை இசையில் பாரதி' எனும் மெல்லிசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன்  மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  ஆகியோர் பங்கேற்று இவ்விழாவினை, தொடங்கி வைக்கிறார்கள்.

stalin

தமிழ் இசையின் வளர்ச்சியில் பாரதியின் பங்கு மகத்தானது. பெரும்புலவன் பாரதி கவிஞர் மட்டுமல்ல, சிறந்த இசைக் கலைஞரும் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. மகாகவி பாரதி தாமே மெட்டமைத்துப் பாடித் தமது துணைவியாருக்கும், ஏனைய பிற பெண்களுக்கும் கற்றுக்கொடுத்த பாடல்களை இன்றும் நாம் பாடி வருவது சிறப்பு. பெரும்புலவன் பாரதி இசையமைத்துப் பாடிய பாடல்களின் பண்ணழகு , பல பாடல்களுக்குப் புதிய வகையில் அவர் அமைத்த மெட்டுகள் அசாதாரணமானவை. மிகவும் எளிதான சிந்து உள்ளிட்ட பழைய மெட்டுக்கள் கூட அவரின் இசையில் பாடல்களில் புதிய தோற்றம் கொண்டு ஒளி வீசும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாரதியாரின் பாடல்களை, முன்னணிப் பாடகர்கள் பாடும் இந்த இசை நிகழ்ச்சியை பொது மக்கள் முற்றிலும் இலவசமாகக் கண்டும் கேட்டும் மகிழ்ந்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.