நெல்லையில் திக் திக்... பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு..!
திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள கல்லணை அரசு பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் மரிய ஜெயா என்பவர் புதிதாக வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த வீடு பூட்டிக் கிடந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் முக்கூடல், சிங்கம்பாறை கிராமத்தை சேர்ந்த ஆபேல் ராஜா என்பவரின் மனைவி மரிய ஜெயா என்பது தெரிய வந்தது. மேலும், தனது மனைவியைக் காணவில்லை என்று ஆபேல் ராஜா கடந்த 10-ஆம் தேதி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
அவர் மனைவியைக் காணவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், இங்கு உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர், முக்கூடலைச் சேர்ந்த பெண், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஏன் வீடு எடுத்து தங்க வேண்டும்? இங்கு உயிரிழக்க காரணம் என்ன? என்று வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.
இந்நிலையில், முக்கூடல் போலீசார் ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த தகவலின்படி, ஆபேல்ராஜா தனியார் பேப்பர் மில்லில் பணிபுரிந்து வருகிறார். தற்போது உயிரிழந்த அவரது மனைவி மரிய ஜெயா, தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதால் வேலை நிமித்தமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அவர் செல்ல வேண்டியிருக்கும்.
இது போன்ற சுழலில் மரிய ஜெயா வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பாததால் அவரது கணவர் ஆபேல் ராஜா, கடந்த 10ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், மரிய ஜெயாவை பல இடங்களில் தேடிய போது, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மரிய ஜெயாவுக்கும், அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்ததா என்பது குறித்தும், ஒருவேளை குடும்ப பிரச்சனை காரணமாக மரிய ஜெயா விபரீத முடிவை எடுத்தாரா என விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர்.

