"அவர்கள் மனிதர்களே கிடையாது.. மிருகங்கள்!" - நீதிமன்ற வளாகத்தில் பென்னிக்ஸ் சகோதரி ஆவேசம்!
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் எஸ்எஸ்ஐ பால்துரை கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து ஜெயராஜ் மகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறை தாக்கியதால் தான் தந்தை மற்றும் சகோதரர் மரணம் ஏற்பட்டது. எங்களுக்கான நீதி கிடைத்துள்ளது என நினைக்கிறேன். தண்டனை விபரங்கள் வந்தால் தான் முழுவதுமாக கூற முடியும். மார்ச் 30 ஆம் தேதி தண்டனை விபரங்களுக்காக காத்திருக்கிறோம்
தந்தை மற்றும் சகோதரருடைய அன்பு இல்லாமல் தவிக்கிறோம். எனது சகோதரன் வாழ்க்கை தொடங்கும் முன்பே அடித்து கொன்று விட்டார்கள். நாங்கள் உயிரோடு உள்ளவரை இதை மறக்க முடியாது. அது எங்களுக்கு இழப்புதான். தந்தை மற்றும் சகோதரன் ஆகிய இருவர் முன்பாகவே காவல்துறையினர் அவர்களை அடித்து தாக்கியுள்ளனர். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும். தந்தை மற்றும் சகோதரரை தாக்கிய 9 பேரும் மனிதர்களே கிடையாது. மிருகமாகத்தான் அவர்கள் செயல்பட்டுள்ளனர்.
என் அப்பா, தம்பியின் அன்பை இழந்துள்ளோம். 31 வயதான என் தம்பியை அடித்து கொன்றுள்ளனர். அப்போது தான் வாழ்க்கையை தொடங்கினார், அதிகாரத்தினால் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டனர்.அன்று இரவு 7.45 மணிக்கு கடையில் இருந்து அழைத்து போன உடனே அடிக்க தொடங்கிவிட்டனர். 7.50-ல் இருந்து 11.30 மணி வரை அடித்துள்ளனர். அதன் பிறகு காவலர் ரகு கணேஷ் வந்து நள்ளிரவு மூன்று மணி வரை என் அப்பாவையும், தம்பியையும் மாறி, மாறி அடித்துள்ளார். அப்பா முன்பு தம்பியையும், தம்பி முன்பு அப்பாவையும் தாக்கியுள்ளனர். இவற்றை எல்லாம் காவல் ஆய்வாளர் ரசித்துள்ளார்.
அதிகாரத்தில் நாம் இருக்கிறோம், நாம் போலீஸ் என்பதால் கேள்வி கேட்க முடியாது என்பதற்காக அடித்துள்ளனர். இவர்கள் மனிதர்களே கிடையாது. இந்தத் தண்டனையை முன்பே வழங்கியிருக்க வேண்டும், அவ்வாறு முன்பே வழங்கி இருந்தால் இதற்கு பின்பாக நடைபெற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கும். நமக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அந்த காவலர்களுக்கு இல்லை, இந்த மரணம் கொடூரமானது. எங்களுக்காக போராடிய, குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜெப சிங் பேசுகையில், ”சாத்தன்குளம் வழக்கில் வழக்குப்பதிவு செய்வதற்கு பல நாட்கள் எடுத்துக் கொண்டனர். பல போராட்டங்களுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு பிறகு வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி” என கூறினார்.

