இனி இவர்களுக்கு அனுமதி இல்லை..! இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு..!

 
1

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் சுற்றி வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இயற்கையாக உருவான மிக குறுகலான பாறை இடுக்கின் வழியாக உடலை வளைத்து, நெளிந்து சென்று மறுபுறம் வெளிவந்து விநாயகரை தரிசித்தால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பக்தர்கள் அந்த துவாரத்தின் வழியாக செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிகுமார் என்ற பக்தர், இடுக்கு பிள்ளையார் கோவிலின் குறுகலான துவாரத்தின் வழியாக வெளியே வந்த பின்னர் திடீரென மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, நேற்று பெண் பக்தர் ஒருவர் அதே துவாரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டார். அப்போது அருகில் இருந்த பக்தர்கள் பதற்றமடைந்த நிலையில், வெளியே நின்றிருந்த ஒருவர் அவரது கையைப் பிடித்து பாதுகாப்பாக வெளியே இழுத்து மீட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டு நாட்களில் நடந்த இந்த சம்பவங்கள், இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின.

இதையடுத்து, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று இடுக்கு பிள்ளையார் கோவில் நுழைவாயிலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வழிகாட்டு நெறிமுறை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், மூச்சுத் திணறல் அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்கள், இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் குறுகலான இடங்களில் செல்ல சிரமம் உள்ளவர்கள் துவாரத்தின் வழியாக செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துவாரத்தின் நுழைவுப் பகுதியில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு வெல்டிங் செய்யப்பட்டுள்ளன. அந்த கம்பிகளுக்கு இடையில் எளிதாக செல்லக்கூடிய பக்தர்கள் மட்டுமே துவாரத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் உடல் அமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் முன்கூட்டியே பரிசீலிக்கப்பட்டு, ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்கள் துவாரத்திற்குள் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பௌர்ணமி தினங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என கோவில் இணை ஆணையர் பரணிதரன் அறிவித்துள்ளார்.