"காலம் இருக்கிறது.. நல்லதே நடக்கும்!" – ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை சொன்ன அந்த ஒரு வார்த்தை!

 
1

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தீபம் ஏற்றுமாறு உத்தரவிட்டும், அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. ஓரிரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரைக்கு வந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “மாவட்ட ஆட்சியர் என்பவர் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்றால், அது முதலமைச்சரே மன்னிப்பு கேட்டதாகத்தான் பொருள்” என கூறினார்.

இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து கேள்விக்கு, "இது தொடர்பான வீடியோவை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, அவரது கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தால், சட்ட ஒழுங்கை காக்கலாம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியிலிருந்து தமிழ்நாடு வரும் தலைவர்களின் எண்ணம் வேறாகவும், காங்கிரஸ் மாநிலத் தலைவரின் எண்ணம் வேறாகவும் உள்ளது. தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மீதே நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் தான் இன்றைய காங்கிரஸ் மாநிலத் தலைவரின் நிலைமை இருக்கிறது” என்று அவர் விமர்சித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை சேர்க்காதது குறித்து கேட்டதற்கு, “யாரும் (ஓபிஎஸ்) தனித்துவிடப்படவில்லை. காலம் இருக்கிறது. காத்திருப்போம். நல்லதே நடக்கும். திமுக ஆட்சியை மக்கள் அகற்ற நினைக்கிறார்கள். அதற்கேற்ற விஷயங்கள் நடக்கும்” என அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னதாக, மதுரையில் நடைபெற்ற தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் (SIFB) நிறுவனத் தலைவர் திருமாறன் மகளின் திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டார்.