கேள்வி நேரம் இல்லை! தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அட்டவணை..!!
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவரது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். தொடர்ந்து அவரது உரையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசித்தார். அதன் பின்னர் சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது தொடர்பான விவரங்களை அறிவித்தார்.
அதன்படி, இன்று ஜூன் 19 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படவுள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, முன்னாள் பேரவைச் செயலாளர் சி.கு. இராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கே.ராஜன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தொடர்ந்து, ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. ஜூன் 23ஆம் தேதி விவாதம் தொடர்வதுடன், அதேநாளில் அரசின் பதிலுரையும் வழங்கப்படவுள்ளது.
வழக்கம்போல் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். குறுகிய காலக் கூட்டத்தொடராக இருப்பதால், கேள்வி-பதில் நேரம் இந்த முறை இடம்பெறாது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நேரலை ஒளிபரப்பு குறித்து பேசிய அவர், "ஆளுநர் உரை மற்றும் பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்புவது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. செய்தித்துறை அமைச்சரின் கருத்துகளையும், பரிசீலித்த பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும், பேரவையில் சில உறுப்பினர்களின் இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள மானிட்டர்கள் செயல்படவில்லை என எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவற்றை வெள்ளிக்கிழமை காலையில் கூட்டம் தொடங்குவதற்குள் சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் திருத்தங்கள் கோர விரும்பும் உறுப்பினர்கள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக தங்களது திருத்தங்களை சமர்ப்பிக்கலாம்.
அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் யார் என்பதும் நாளைய கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஆளுநருக்கு நன்றி” என்று ஜேசிடி பிரபாகர் கூறினார்.

