பிலால் ஓட்டலுக்கு சோதனைக்கு வந்த அதிகாரிகள் வாசல் வரை வந்து திடீரென திரும்பி சென்றதால் பரபரப்பு

சென்னை மவுண்ட் ரோடு பிலால் ஓட்டலில் சோதனைக்கு வந்த அதிகாரிகள் வாசல் வரை வந்து திடீரென திரும்பி சென்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள அசைவ ஹோட்டலில் கடந்த 30ஆம் தேதி உணவு சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு 17 புகார்கள் வந்துள்ளன. இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும், ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், ஒரு சிலர் வீட்டிலேயே (கை வைத்தியம்) சிகிச்சை பெறுவதாகும் போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் ரத்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகார் கொடுத்தவுடன் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலுக்கு ஆய்வுக்காக வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீரென படபடப்பு, தலைசுற்றல் ஏற்பட்டதால் சோதனை நடத்தாமலேயே திரும்பி சென்றனர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு இசிஜி எடுக்கப்படுகிறது.