ஈஷா மையம் மீதான வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை.. ஆனால் நிலுவை வழக்குகள்..!! - உச்சநீதிமன்றம்..
கோவை ஈஷா மையத்தில் பெண்கள் விருப்பத்தின் பேரிலேயே இருப்பதால் , விசாரணையை தொடர முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈஷா மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத் தரக்கோரிய தந்தையின் ஆட்கொணர்வு மனுவுக்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா மையத்தில் படிக்கச் சென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈஷா மையம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈஷா மையம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு தடை விதித்ததுடன், காவல் துறையினர் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று தமிழக போலீஸார் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், “ஈஷா மையத்திற்குச் சென்றவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இதில், பலரை காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை. ஈஷா மையத்திற்குள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா மையத்திற்குள் செயல்பட்டுவரும் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது. ஈஷா மையத்தில் உள்ள 533 பேரிடம் உணவு, பாதுகாப்பு நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு, ஈஷா மையத்தில் முறையாக செயல்பாட்டில் இல்லை” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஈஷா தரப்பில், அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், தங்களது தந்தை மீதும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசுத்தரப்பு, ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், நிலுவை வழக்குகளை சட்டப் படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது என்றும் வினவினர். மேலும், 2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை என்றார். அதேநேரம் வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது என்றும் தெரிவித்தார்.


