திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை - நடிகை விளக்கம்..!

 
1

தென்னிந்திய முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சியாக நடிக்கலாம் என்றும், அது நடிப்பின் ஒரு பரிமாணம் என்றும் கூறியுள்ளார். நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் காலியாகிவிடும் என்ற பேச்சு மாற வேண்டும் என்றும், திறமை இருந்தால் யாரும் தடைகளைத் தாண்டி முன்னேறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் தன்னை பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், தமிழில் 'தடையற தாக்க', ‘ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று, 'என்.ஜி.கே.', 'அயலான்', 'இந்தியன்-2' படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் 'இந்தியன்-3' திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதுதவிர இந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தில் சூர்ப்பனையாகவும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வருமான வரி சோதனை போன்ற பல்வேறு சிக்கல்களையும், விமர்சனங்களையும் கடந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்ட பின்னரும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது களமிறக்கி ரசிகர்களின் இதயங்களில் பரவசம் மலரச் செய்து வருகிறார்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, “திரையுலகில் பொதுவாக நடிகர்களுக்கு இருக்கும் சிறப்பம்சம் நடிகைகளுக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு நடிகர்கள் திருமணமாகி, குழந்தைகள் பெற்றுக்கொண்டும் ஹீரோவாக நடிக்கலாம். அதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் போதும், உடனே அவ்வளவு தான் என்று பேச்சு கிளம்பிவிடும். அதுவும் நடிகைகளுக்கு குழந்தைகள் பிறந்து விட்டால் போதும், 'மார்க்கெட் காலி' என்று தம்பட்டம் அடிப்பார்கள்.

இந்தநிலை மாற வேண்டும். வாழ்க்கையில் திருமணமும் ஒரு அங்கம் தான். அது நடிகைகளுக்கு எந்தவகையில் தடைபோட முடியாது. நடிகைகளின் திறமைகளுக்கு வேகத்தடையாகவும் அமைந்துவிடாது. திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி படங்கள் வெளியிட்டாலும் விமர்சனம் வந்துவிடுகிறது. திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை. நடிகைகளின் திறமையை யாரும் தடுத்து விடமுடியாது. கவர்ச்சியை ரசிப்பதில் தவறு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பரிமாணம் தான். அதுவும் ஒருவகையான நடிப்பு தான். அதில் குறைகாண்பது என்பது தவறு. கவர்ச்சியாக நடிப்பதில் தவறு கிடையாது. ஆனால் கவர்ச்சி என்பது எல்லைதாண்டி விடக்கூடாது. அதுதான் முக்கியம்.

என் பயணத்தில் நான் மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருக்கிறேன். எனவே எந்த விமர்சனங்களும் என்னை எதுவும் செய்துவிட முடியாது. இங்கு யாரும், யாருக்கும் தடை போடவோ, அளவீடு நிர்ணயிக்கவோ முடியாது. திறமை இருந்தால் நாம் போய்க்கொண்டே இருக்கலாம்", என்கிறார்.