வங்கியில் நகை இல்லை! ஆனால் கோடிகளில் கடன்... தேனி கனரா வங்கியில் நடந்த பலே மோசடி..!
தேனி ஓடைப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக். இவரே மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலியான ஆவணங்களைத் தயார் செய்து நகைக் கடன் மோசடி சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
கார்த்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓடைப்பட்டி வங்கியில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வங்கியில் மகளிர் சுய உதவிக்காக பெண்கள் சமர்பிக்கும் ஆவணங்களைப் போலியாக தயார் செய்து, அதைப் பயன்படுத்தி நகைக் கடன் கணக்கைத் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் நகைக் கடனுக்காக ஆவணங்களை வழங்குவது போல இவரே போலியான ஆவணங்களைத் தயார் செய்து 113 பெண்களின் பெயரில் இந்த மோசடி சம்பவத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக வங்கியின் நகை மதிப்பீட்டாளர், கிளர்க் ஆகியோரின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இந்த மோசடியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுபோன்று இன்னும் பல்வேறு மோசடி புகார்கள் கார்த்திக் மீது எழும்பிய நிலையில், அவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள கூழையனூர் பகுதியில் உள்ள வங்கி கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கும் அவர் அதே பாணியில் மோசடி சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். கூழையனூர் கிளையில் சுமார் 2 கோடி மதிப்பிலான நகை கடன் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார்
இந்த நிலையில், கூழையனூர் வங்கி கிளையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது நகைக்கடன் பெயரில் பணம் கொடுக்கப்பட்டதும், ஆனால், அதற்கு ஈடான நகைகள் வங்கியில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆகையால், இதுகுறித்து வங்கி மேலாளர் கார்த்திக்கிடம் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் கிளையில் மகளிர் சுய உதவி குழு பெண்களின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கார்த்திக் தற்போது திடீரென தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர்.
பயனாளிகள் பெயரை பயன்படுத்தி வங்கி மேலாளர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இதுவரை ரூ. 11.5 கோடி வரை மோசடி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

