நெல்லையில் பூணூல் அறுப்பு சம்பவம் நடக்கவே இல்லை- காவல்துறை
நெல்லையில் இளைஞரின் பூணூல் மர்ம நபர்களால் அறுக்கப்பட்டதாக புகார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் புகாரில் குறிப்பிட்டபடி, சம்பவம் எதுவும் நடக்கவில்லை என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS நகரில் கடந்த 21.09.2024 ம் தேதி மாலை சுமார் 04.30 மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து அகிலேஷ் என்ற இளைஞரின் பூணுலை அறுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் 460/24 CSR பதிவு செய்யப்பட்டது. இப்புகார் தொடர்பாக காவல் துறையினரால் அன்றைய தேதியில் அகிலேஷ் என்பவர் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் மற்றும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட சாலையிலும் உள்ள CCTV காமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணுலை அறுத்ததாக புலப்படவில்லை. மேற்படி CCTV காமிரா பதிவுகளை பார்வையிட்டதிலிருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணுலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.