"திருப்பதிக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை" -ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்
திருப்பதி தேவஸ்தானம் எங்களது நெய்யை ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறையும் கண்டறியப்படவில்லை என ஏ.ஆர் புட் பேக்டரி தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி லட்டு தாயாரிப்பில் மாட்டிறைச்சி கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் தங்களது நெய் தரமானது என திண்டுக்கல் ஏ.ஆர். நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, “ திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியது ஜூன் ஜூலை என இரண்டு பாகங்கள் தொடர்ச்சியாக அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. தற்போது எங்கள் நிறுவனத்தின் மீது, ஏ.ஆர் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வந்து வருகிறது. அதில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை என்றாலும் அதில் உள்ள செய்திகளை வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எங்களுடைய தயாரிப்பில் குறை இருந்தால், எங்களது நெய் எல்லா இடத்திலும் உள்ளது; அதனை ஆய்வு செய்யலாம். அதன் தரத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை. எங்கள் நிறுவனத்தின் மீது தொடரப்படும் குற்றச்சாட்டுகளுக்கு , பதிலளிக்கும் விதமாக எங்களது நிறுவனத்தின் பொருள்களை செக் செய்து கொள்ளலாம். 25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். இதுவரை எங்களது பொருட்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்தியது கிடையாது. இது எங்களின் விளக்கம். எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், “எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது. அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம். எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம். லட்டு தயாரிப்புக்காகவே ஒப்பந்தம் போடப்பட்டு நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய பல பேரில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில் எங்கள் பொருளில் எந்த ஒரு குறைகளும் இல்லை என்றே வந்துள்ளது. எங்களிடம் எங்களது ஆய்வுக்கான அறிக்கைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வறிக்கைகளும் உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை.” என்று கூறியுள்ளனர்.