‘அந்த முடிவில் எந்த சமரசமும் இல்லை.. உறுதியாக இருக்கிறோம்’ - தவெக தலைவர் விஜய்..!!
கூட்டணி குறித்தும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்தும் தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, கட்டியை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது, களத்திற்குச் சென்று மக்களை சந்திப்பது என சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்றன. அந்தவகையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து தென்மாவட்டங்களை மையப்படுத்தி மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்த இருக்கிறார். முழு வீச்சில் தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய், ஏற்கனவே அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும் இது தொடர்பான சலசலப்புகள் தொடர்ந்து வண்ணமே உள்ளன.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தனியார் தொலைக்காட்சி நெறியாளரிடம் கலந்துரையாடிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது விஜய் கூறியதாவது, “எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். தவெக முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.” என்று கூறியுள்ளார்.

